×

செல்லியாண்டியம்மன் கோயில் விழா கருவறைக்குள் சென்று அம்மனுக்கு புனிதநீர் ஊற்றி பக்தர்கள் வழிபாடு

பவானி: பவானி செல்லியாண்டியம்மன் கோயில் திருவிழா ஆண்டுதோறும் மாசி மாதத்தில் நடைபெறுவது வழக்கம். விழாவை முன்னிட்டு, கடந்த 19ம் தேதி பூச்சாட்டுதல் நடந்தது. 26ம் தேதி கம்பம் நடுதல், 27ம் தேதி கொடியேற்றம் நடந்தது. இதைத்தொடர்ந்து, நேற்று அதிகாலை ஒரு மணி முதல் பக்தர்கள் அம்மன் கருவறைக்கு சென்று பால் மற்றும் புனிதநீர் ஊற்றி வழிபடும் நிகழ்ச்சி துவங்கியது.  அம்மனுக்கு பல்வேறு வேண்டுதல்களை செய்திருந்த ஆண்கள், பெண்கள் உள்பட ஏராளமானோர் நீண்டவரிசையில் காத்திருந்து அம்மனுக்கு புனிதநீர் ஊற்றி வழிபாடு நடத்தினர்.

செல்லியாண்டியம்மன் கோயில் துவங்கி காவிரி ஆற்றின் பழைய பாலத்தை கடந்து குமாரபாளையம் வரையில் பக்தர்களின் கூட்டம் நீண்ட வரிசையில் காத்து இருந்தது. பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த பவானி டிஎஸ்பி சார்லஸ் தலைமையில் இன்ஸ்பெக்டர் தேவேந்திரன் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இன்று (6ம் தேதி) காலை எல்லையம்மன் கோயிலில் இருந்து அம்மன் அழைத்தல் நிகழ்வு நடக்கிறது. மேலும், பொதுமக்கள் உப்பு, மிளகு, ஆடைகள் மற்றும் காய்கறிகளை அம்மன் ஊர்வலத்தின் போது சாலையில் வீசி வழிபாடு நடத்துவர்.அம்மன் அழைத்தல் நடப்பதையொட்டி, பவானி நகருக்குள் கனரக வாகன போக்குவரத்து இன்று காலை முதல் தடை செய்யப்பட்டுள்ளது. நாளை மறுநாள் (வியாழன்) தேரோட்டமும், மாலையில் கம்பம் விடுதலும் நடக்கிறது.

Tags : Devotees ,visit ,sanctum sanctorum ,
× RELATED 16 மணிநேரம் காத்திருந்து திருப்பதியில் தரிசனம்